யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் மதுபோதைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட கடற்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த தீவில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக பிணக்கு நிலவி வந்திருக்கின்றது. இது தொடர்பில் மதுபோதையில் குழு ஒன்று கடற்படையினரிடம் முறையிடச் சென்றிருக்கின்றது.
குறித்த குழுவினரின் நிலையை அவதானித்த கடற்படையினர் இந்தச் சம்பவம் தொடர்பில் தம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது என்றும் பொலிஸாரிடம் முறையிடுமாறும் தெரிவித்து திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.
அதனை அடுத்து கடற்படையினர் தம்மைத் தாக்கியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சேருவோம் என்று அவர்கள் வைத்தியசாலை நோக்கிச் சென்றதாகவும் அவ்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படையினர் இருவர் மீது கற்களால் தாக்கி காயப்படுத்தியதாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த நபர்களின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் ஒருவர் கடற்படை முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி என்று தெரியவந்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் நால்வர் ஈடுபட்டிருந்ததாகவும் ஒருவர் மட்டும் தன்னை கடற்படையினர் தாக்கியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் தன்னை அனுமதிக்குமாறு கோரி அங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இதனிடையே தாக்குதல் நடத்திய ஏனையவர்கள் மூவரும் தப்பி ஓடியுள்ள நிலையில் மேலதிகமாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு அனலைதீவு சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.