மார்ச் மாத துவக்கத்தில் கொரோனா சுவிட்சர்லாந்தில் பரவத் தொடங்கியபோது, சுவிட்சர்லாந்தில் மாஸ்குகளுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. பார்மஸிக்களில் உடனுக்குடன் மாஸ்குகள் விற்றுத்தீர்ந்தன.
தட்டுப்பாடு கடுமையாக இருந்ததால், அதிகாரிகள் வெளிநாடுகளிலிருந்தெல்லாம் மாஸ்க் ஆர்டர் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது.
அத்துடன் மாஸ்க் தயாரிக்கும் இயந்திரங்களும் வாங்கப்பட்டன. ஏப்ரலில் தட்டுப்பாடின்போது அதிகாரிகள் நாளொன்றிற்கு ஒரு மில்லியன் மாஸ்குகளை கடைகளுக்கு வழங்கும் வகையில் மாஸ்குகளை ஆர்டர் செய்ய இருப்பதாக உறுதியளித்தனர்.
இத்தனைக்கும் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு கூறவேயில்லை. பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மட்டுமே மாஸ்க் அணிய பரிந்துரைக்கப்பட்டது.
தற்போது 300 பேர் வரை கூட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத இடங்களில் மாஸ்க் தேவைப்படலாம். ஆகவே, இப்போது நாட்டில் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால், ஆர்டர் செய்த எக்கச்சக்கமான மாஸ்குகளை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்வது என்பதுதான் அது.
அதாவது, சுவிஸ் அதிகாரிகளும் இராணுவமும் சுமார் 250 மில்லியன் மாஸ்குகளை ஆர்டர் செய்திருந்தன.
40 மில்லியன் மாஸ்குகள், மாகாணங்களுக்கும் வியாபாரிகளிடமும் வழங்கப்பட்டுவிட்டன.
இன்னும் 90 மில்லியன் மாஸ்குகள் சீனாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
மற்றொரு 20 மில்லியன் மாஸ்குகள் பல்வேறு கிடங்குகளில் சேமித்துவைக்கப்பட்டுள்ளன.
அவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது என சுவிட்சர்லாந்து விழித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது மக்கள் பரபரப்பாக மாஸ்குகளை தேடும் அளவில் கொரோனா தொற்றும் இல்லை. விமானங்கள், பொதுப் போக்குவரத்து போன்ற இடங்களில் வேண்டுமானால், அதுவும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாத சூழல் ஏற்படும்போது மாஸ்குகள் தேவைப்படலாம்.
அல்லது கொரோனாவின் இரண்டாவது அலை அடிக்கும் என எண்ணி முன் ஜாக்கிரதையாக மக்கள் மாஸ்குகளை வாங்கினால் மட்டுமே மாஸ்குகள் செலவாகும் போலிருக்கிறது!