ஊடகவியலாளர்களின் படுகொலைக்கும் அப்போது எனது தலைமையில் இருந்த அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில், ‘ஊடகவியலாளர்களுக்கு எதிராகச் செயற்பட்டீர்கள்?’ என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க என்னைச் சந்திப்பதற்கு இரவில் வருவார். அவரின் பாதுகாப்புக் கருதி ‘புள்ளட்புரூவ்’ காரிலேயே அவரை நான் அனுப்பிவைப்பேன். ஏனெனில், அவருக்கு எதிராகச் செயற்படும் குழுவொன்று இருந்தது.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கும் அப்போது எனது தலைமையில் இருந்த அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
மேலும், சில ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சிலர் தாக்கப்பட்டார்கள். இவற்றின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். பெயர் குறிப்பிட்டு ரணில் விக்கிரமசிங்க கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
எனவே, அரசின் தேவைகளுக்காக இவை இடம்பெறவில்லை. ஊடகவியலாளர்களை ஒடுக்க வேண்டிய தேவையும் எமக்கு இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.