சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் 8 வயது சிறுவன் தமது சகோதரனுடன் செய்த செயலால் தற்போது பொலிஸ் விசாரணைக்கு இலக்காகியுள்ளான்.
குறித்த சிறுவன் தொடர்பான அனைத்து தகவல்களும் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டு வரை காவல்துறை ஆவணங்களில் பதிவாகியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பாஸல் மண்டலத்தின் Diegten பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனும் அவனது 10 வயது சகோதரனும், விளையாட்டு பணத்தாளை பயன்படுத்தி அங்காடி ஒன்றில் இருந்து பொருட்களை வாங்க முயன்றுள்ளனர்.
கடையின் கணக்கர் அந்த பணத்தாள் போலி என உடனடியாக கண்டறிந்து இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்துள்ளார்.
மட்டுமின்றி, குறித்த தகவலை பொலிசாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
பொலிசார் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டதுடன், குறித்த அங்காடியில் பதிவான கண்காணிப்பு கெமரா கட்சிகளில் இருந்து சிறுவனின் புகைப்படத்தை கண்டுபிடித்தனர்.
சுமார் ஒரு மாத காலம் அந்த புகைப்படத்திற்காக செலவிட்ட பொலிசார் இறுதியில் வெற்றியும் பெற்றனர்.
தொடர்ந்து சிறுவன் தொடர்பில் தகவல் சேகரித்த பொலிசார், முதன் முதலில், சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொலைபேசியில் பொலிசார் அளித்த விளக்கம் தமக்கு அதிர்ச்சியை அளித்ததாகவும்,
கண்ணீரை தம்மால் அடக்க முடியவில்லை எனவும், மிக மோசமான நிகழ்வுகள் நடந்தேற இருப்பதை தாம் உணர்ந்ததாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பொலிசார் புகைப்பட ஆதாரங்களை காண்பித்துள்ளனர். மட்டுமின்றி அந்த சிறுவன் ஒருமுறையல்ல மொத்தம் 13 முறை விளையாட்டு பணத்தாளை பயன்படுத்தியுள்ளதை விசாரணையில் கண்டறிந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சிறுவன் சிறைக்கு செல்லும் அளவுக்கான வழக்கு அல்ல இதுவெனவும், ஆனால் போலி பணத்தள்களை பயன்படுத்திய விவகாரம் 2032 வரை காவல்துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.