பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாகவும் உடனடியாகவும் தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பேசிய ஜனாதிபதி,
மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பில் விரைவாக அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனம் செயல்பட வேண்டும்.
பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாக தயாரிக்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த 05 வருட இறுதியில் நிறுவனத்தை பொறுப்பேற்ற போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்த வருடத்தில் அடையவேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிட வேண்டும். அவை சரியான ஒழுங்கு விதிகளுக்குட்பட்டு வழி நடத்தப்பட வேண்டும்.
இதேவேளை, அரச நிறுவனங்களிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் உரிய முறையில் கிடைக்காத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகளும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து கண்டறிந்து பணத்தை அறவிடுவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.