அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கவலை தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்..
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் கருத்து தெரிவித்தார்.
கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக சமூக இடைவெளி வலியுறுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென்றும் அமைச்சர் கூறினார்.
அமெரிக்காவில் கறுப்பின பிரஜை ஒருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கொள்ளுபிட்டியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில், முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அதனை பொலிஸார் கலைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.