யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 950 ரூபாய் உயர்வடைந்து 84 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை வரலாற்றின் ஆபரணத்தங்கத்தின் அதிஉச்ச விலை ஏற்றம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்களின் பார்வை பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியது.
இதனையடுத்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
இந்த் நிலையில் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
அத்துடன் கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது தினமும் உயர்வடைந்து வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை
யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூன் 12) வெள்ளிக்கிழமை 22 கரட்ஆபரணத் தங்கத்தின் விலை 84 ஆயிரத்து 350 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. நேற்று இதன் விலை 83 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை பவுணுக்கு 950 ரூபாய் உயர்ந்துள்ளது.
தூய தங்கத்தின் விலை
ஆபரணத் தங்கத்தைப் போலவே 24 கரட் தூய தங்கத்தின் விலை நேற்று 91 ஆயிரம் ரூபாயிலிருந்து இன்று 92 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.