பாரிஸ் நகரில் இனவெறி மற்றும் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்வலர்கள் மீது பிரெஞ்சு பொலிசார் கடும் மோதலில் ஏற்பட்டதால் பாரிஸ் நகரம் கலவர பூமியாக மாறியது.
பாரிஸ் நகரில் இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசார் மீது கற்களை வீசியுள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க மாகாணங்கள் மற்றும் பிரித்தானிய தலைநகரில் நடந்தேறும் கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் ஒருபகுதியாகவே பாரிஸ் நகரில் ஆர்வலர்கள் பேரணிக்கு அனுமதி கோரியுள்ளனர்.
கடந்த 2016-ல் பிரெஞ்சு பொலிஸ் காவலில் பரிதாபமாக பலியான கருப்பின இளைஞர் Adama Traoré என்ற இளைஞரின் நினைவாகவே பாரிஸ் நகரில் ஆர்வலர்கள் பேரணி முன்னெடுக்க முடிவு செய்தனர்.
மத்திய பாரிஸில் உள்ள Place de la République பகுதியில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான இனவெறி எதிர்ப்பு ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.
இருப்பினும் அவர்கள் ஓபராவுக்கு ஊர்வலம் செல்ல முயன்றதால் பொலிசாரால் அவர்கள் தடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து மோதல் போக்கு உருவானது, பொலிசார் கண்ணீர்ப்புகை வீச்சு நடத்தினர், மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட Adama Traoré-ன் சகோதரி Assa Traore, நீதி மறுப்பை, சமூக, இன, பொலிஸ் வன்முறையை கண்டிக்க அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் என்ன நடந்தேறுகிறதோ அதே நிலை பிரான்சிலும் நடந்தேறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இருப்பினும், இனவெறியையும் மிருகத்தனத்தையும் தாங்கள் பொறுத்துக்கொள்வதாக கூறப்படுவது தங்களை அவமானப்படுத்தும் செயல் என பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே அனுமதி மறுக்கப்பட்ட இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 15000 பேர் கலந்து கொண்டுள்ளதாகப் பாரிஸ் காவல்துறைத் தலைமையகம் கூறியுள்ள நிலையில் 20,000 பேருக்கும் அதிகமானோர் கூடியதாக, ஊடகங்கள் தெரிவித்துள்ளன.