தமிழகத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், அவர் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டிற்கு பின்னால் இருக்கும் குளியலறையில் குளித்து செல்வது வழக்கம். அப்படி இவர் குளித்துக் கொண்டிருந்ததை, அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோவாக எடுத்து மிரட்டியுள்ளனர்.
இதனால் அந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதை வீடியோ எடுத்தவர்கள் எனது சித்தப்பா தொலைப்பேசிக்கு அழைத்தனர்.
அப்போது, உன்னையும், உன் சித்தப்பாவையும் பழிவாங்கவே நீ குளிப்பதை வீடியோ எடுத்துள்ளோம். அதை இந்த தொலைபேசியில் உள்ள வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பியிருக்கிறோம் என்று கூறினார்.
அதன் பின் அந்த வீடியோவில், நான் குளிப்பதை எனக்கு தெரியாமலே அவர்கள் வீடியோ எடுத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
பிறகு அவர்கள் மீண்டும் போன் செய்தனர். அப்போது அந்த வீடியோ வேண்டுமானால் 5,000 ரூபாய் பணம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டினர்.
இதனால் நான் உடனடியாக, என் சித்தப்பாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினேன். பணம் கொடுக்க வேண்டாம், இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என எனது சித்தி கூறினார்.
பிறகு இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தனர். அதன்பிறகு என்னை வேலூர் கோட்டைக்கு வருமாறு அழைத்தனர். வர மறுத்தால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினர்.
அதையடுத்து அந்த வீடியோவை என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். நான் எங்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்.
மறுநாள் மீண்டும் போன் செய்து அருகே உள்ள ஏரிக்கரை மலைக்கு வருமாறு அழைத்தனர். நான் அங்கு அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, மூன்று பேரில் ஒருவனைப் பிடித்துக்கொண்டேன், பின்னர் உடனிருந்தவர்கள் ஓடிவிட்டனர்.
அவனிடமிருந்து தொலைப்பேசியை பிடுங்கி, அதிலிருக்கும் எனது வீடியோவை நீக்க முயற்சி செய்தேன். அப்போது, அந்த தொலைபேசியில் பல பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அனைத்தையும் நீக்கிவிட்டு, இதுகுறித்து வீட்டிற்கு தெரிவிக்க அங்கிருந்து போன் செய்த நேரத்தில், என்னைத் தலையில் தாக்கிவிட்டு அவன் ஓடிவிட்டான். அதன் பின் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, இதனால் நான் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜி (17), கணபதி என்கிற தாமஸ் (19), ஆகாஷ் (22) என்ற மூன்று நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.