தமிழகத்தில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை மற்றும் பண்ம பறித்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த ஒரு பெண், தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் காரில் கடத்தி சென்று தாக்கியதோடு, அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், பணம் முதலியவற்றை பறித்து மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, குறித்த பெண், ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
அவரின் உத்தரவின்பேரில் பரமக்குடி துணை பொலிஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் மேற்கண்ட செயலில் ஈடுபட்ட நபர்கள் பரமக்குடி பொன்னையாபுரம் அப்துல்ரகுமான் மகன் முகம்மது சீதக்காதி(36), பொட்டிதட்டி காலனி முனியசாமி மகன் இளஞ்செழியன்(23), முத்துவயல் வடக்குத்தெரு ராஜகோபால் மகன் சேதுபாண்டி(24), முத்துசெல்லாபுரம் பாண்டுவம் மகன் தனசேகரன்(30), பாண்டி மகன் அரவிந்த்(25), பிச்சை மகன் காளிதாஸ்(25) என்பது தெரிந்தது.
இவர்கள்தான் அந்த பெண்ணிடம் இருந்த பர்சை பறித்து அதில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டினை எடுத்துள்ளனர்.
மேலும், அந்த பெண்ணை அருகில் இருந்த கருவேல மர காட்டு பகுதிக்குள் தூக்கி சென்று 3 பவுன் தங்க நகைகளை பறித்துள்ளனர்.
இதன்பின்னர் அவரை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி மோட்டார் சைக்கிளில் வைத்து பூவிளத்தூர் சாலை பகுதியிலும், அவருடன் வந்த நபரை அடித்து உதைத்து பரமக்குடி சந்தைக்கடை அருகில் இறக்கிவிட்டும் சென்றுவிட்டுள்ளனர்.
தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், போகலூர், பரமக்குடி, சத்ரகுடி உள்ளிட்ட பகுதிகளில் இளம் பெண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்களை பின்தொடரும் இந்த கும்பல், அவர்களுடன் பேசி பழகி பின்னர் தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர்.
அந்த பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல் செல்போனில் படம் எடுத்து பின்னர் அதனை காட்டி கூட்டு பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை காரில் கடத்தி சென்று ஆபாசமாக படம் எடுத்தும் இந்த கும்பல் மிரட்டி வந்துள்ளது.
தொடர்ந்து, காட்டுப்பகுதிகளில் முயல், மயில்களை வேட்டையாடுவதும் பின்னர் போதை ஏற்றிக்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபடுவதையும் இந்த கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


















