கொலைச் சம்பவங்களை அரசியல் மயப்படுத்தி இலாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர்,
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் என்ன செய்தது?. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருந்த காலத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை அரசியல் மயப்படுத்தியது. இதற்கு பிரபல றக்பி விளையாட்டு வீரரான வசீம் தாஜூடீனின் சம்பவம் சிறந்த உதாரணம்.
இவர்கள் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை அரசியல் மயப்படுத்தி அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருகின்றனர்.
இவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் சாதகமான தன்மையை பெற முயற்சிக்க வேண்டாமென அவர்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொலிஸார் தெளிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவுகளின் படி சட்டம் அமுல்படுத்தப்படும்.
ஒரு சம்பவம் நடந்திருந்தால், சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் இரண்டு முறை யோசிக்க மாட்டோம். தற்போது என்ன நடந்திருக்கின்றது. அனைத்தையும் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருகின்றனர்.
எது எப்படி இருந்த போதிலும் பிரபல றக்பி விளையாட்டு வீரரான வசீம் தாஜூடீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் முக்கிய அரசியல்வாதியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டது.
றக்பி விளையாட்டு தொடர்பான தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளதென அவர் தெரிவித்தள்ளார்.