அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கையால் அமைச்சர்களுக்குள் மாத்திரமன்றி ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளும் முரண்டுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அத்துடன் பொதுத் தேர்தலில் மொட்டு கட்சியே எமக்கு சவாலாக இருக்கப்போகின்றது. 26 வருடங்கள் நிராகரிக்கப்பட்ட தலைவர் தற்போது சிறந்தவராக முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொத்மலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை தனக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.
அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும்போது தனக்கு தேவையானவர்களையே அவர் நியமித்திருக்கின்றார்.
அதேபோன்று ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்களைக்கொண்டு செயலணிகளை அமைத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் அமைச்சர்களுக்கிடையில் பிரச்சினை தலைதூக்கி இருக்கின்றது.
அதுமாத்திரமின்றி ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் அங்கிகரிக்கப்பட்டு, அதன் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் செயலாளரை தெரிவுசெய்யும் அதிகாரத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிய கடிதத்தில் ரணில் விக்ரமசிங்கவே கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவித்த அவர், தாங்கள் தவறு செய்யவில்லை என்றும் அவர்கள்தான் செய்த தவறில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.