நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை கூட்டமைப்பினர் கோருகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படமாட்டாது எனவும் பொதுக் காரணிகளின் நிமித்தமே தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நிகழ்கால அரசியல் நிலைவரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் குறிப்பிடுகையில், இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமோக வெற்றிபெறும் என்பதை உறுதியாகக் குறிப்பிட வேண்டும்.
இதேவேளை, ஆளும் தரப்பினர் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்களின் கருத்தும் வரவேற்கத்தக்கது.
அரசியலமைப்புத் திருத்தம், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவற்றை குறிப்பிட்டுக்கொண்டு கூட்டமைப்பினர் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகிறார்கள் .
தமிழ் மக்களின் குறிப்பாக, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கூட்டமைப்பினர் எக்காலங்களிலும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பினைத் திருத்தவும், நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வையும் கூட்டமைப்பினர் கோருகிறார்கள்.
இதனை ஒருபோதும் செயற்படுத்த முடியாது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும், அல்லது முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.
புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் குறித்து எழுந்துள்ள யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்படும்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இந்தத் தீர்வு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமையாது. அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தீர்வு முன்வைக்கப்படும்.
புதிய அரசாங்கம் அனைத்து இன மக்களையும் ஒன்றுப்படுத்தியதாக அமைய வேண்டும் எனவும், அதற்கான செயற்றிட்டங்களை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் உரிமைகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.