இந்திய- சீன எல்லையில் சீனா ஏராளமான இராணுவ வீரர்களையும், கனரக உபகரணங்களையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.
சீனா தரப்பிலும் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின. அமெரிக்க உளவுத்துறை 35-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவித்தது.
இதையடுத்து இந்திய பிரதமர் மோடி, இந்தியா அமைதியான நாடுதான். அதே சமயம் இந்தியாவை தேவையில்லாமல் சீண்டினால் தக்கப் பதிலடி கொடுப்பதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது என்று கூறினார்.
இதன் காரணமாக, இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனா, கல்வான் பள்ளத்தாக்கு அருகே ஏராளமான இராணுவ வீரர்களையும் கனரக உபகரணங்களையும் குவித்துள்ளதாக ஓய்வு பெற்ற செயற்கைக்கோள் பட நிபுணர் கோல் விநாயக் பட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், செயற்கைக் கோள் படங்கள் தருகிற தகவல்களின் படி கடந்த சில நாட்களாக சீனா, ஆற்றின் குறுக்கே ஆயதப்படைகளை நிறுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
கட்டமைப்புப் பணிகளும் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் அவர்கள் முழு கல்வான் பள்ளத்தாக்கு, ஷியோக் நதியை கைப்பற்ற முயற்சி செய்வதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.