291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதாக விவசாயிகளும், பொதுமக்களும் கவலை வெளியிட்டு வந்த நிலையில், கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அதனை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் செயற்பாட்டால் பலத்த இழுபறிக்கு மத்தியில் வவுனியா மதவு வைத்தகுளத்தில் 291 மில்லியன் ரூபாய் செலவில் 2016 ஆம் ஆண்டு அமைப்பதற்கான நடவடிககைகள் எடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டு அதன் கட்டுமாண பணிகள் 2018 ஆம் ஆண்டு முடிவடைந்து இருந்தது.
நவீன வசதிகளுடன் கூடியதாக 55 கடைத் தொகுதிகளைக் கொண்டதாக பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமாண பணிகள் முடிவடைந்து 2 வருடங்கள் ஆகியுள்ள போதும் அது திறக்கப்படாது புறாக்களின் சரணாலயமாகவும், பற்றைகள் மண்டியதாகவும் காட்சியளித்தது.
தற்போது கொவிட் – 19 தாக்கத்தின் காரணமாக சுகாதார நடைமுறைகளையும், சமூக இடைவெளிகளையும் பேணி மரக்கறி விற்பனையில் ஈடுபடுமாறு சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.
ஆனால் மரக்கறி செய்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு என அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படாமையால் வவுனியா, இலுப்பபையடியில் குறுகிய பகுதிக்குள் சனநெரிசல் மிக்கதாக மொத்த மரக்கறி விற்பனையும், வவுனியா நகரில் பரவலாக வீதியோரங்களில் வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் மரக்கறி விற்பனையும் மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வழங்கினால் தற்போதைய நிலையில் விவசாயிகளும், மரக்கறி செய்கையாளர்களும், வியாபாரிகளும் நன்மை பெற முடியும். அதனை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயத்தினை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அதனை உடனடியாக திறந்து மக்கள் பாவனைக்கு விடுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததையடுத்து பொருளாதார மத்திய நிலையம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மரநடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பொருளாதார மத்திய நிலையத்திற்கான கடைத் தொகுதிகளை சரியான முறையில் பகிர்ந்தளித்து திறப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா…? அல்லது தேர்தலுக்காக இதனை திறக்கப் போவதாக கூறப்படுகின்றதா என்பதே பலரதும் கேள்வி.