வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா நாளை நண்பகல்- 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
தற்போது நாட்டிலும், உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள கொடிய கொரோனாத் தொற்று நோய் காரணமாக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி நயினாதீவைச் சேர்ந்த 30 அடியவர்கள் மாத்திரம் மஹோற்சவ தினங்களில் கலந்து கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
அஹ்துடன் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் கலந்து கொள்ளும் அடியவர்கள் சுகாதாரக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, இவ்வருட நாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் தாம் கலந்து கொள்ள முடியாமை தொடர்பில் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த பல அம்மன் அடியவர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நயினாதீவுக்கு வெளியில் வதியும் அடியவர்கள் உற்சவங்களில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாத காரணத்தால் தமது இல்லங்களிலிருந்து விரதம் அனுஷ்டித்துப் பிரார்த்தனைகளிலும் ஈடுபடுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.