கருணா தெரிவித்துள்ள கருத்துக்கள் புதிய விடயமல்ல, அது ஏற்கெனவே அனைவரும் அறிந்தவை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் கருணாவின் உரையை பூதாகரமாக்கி அரசாங்கம் மீது சேறு பூச முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பொதுஜன பெரமுன வேட்பாளர் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தான் கோவிட் 19 ஐ விட ஆபத்தானவன் என்றும் ஆனையிரவில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் படையினரை பலியெடுத்தவன் எனவும் கருணா அம்மான் அண்மையில் கூறியிருந்தார்.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருவதோடு அவர் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதாகவும் எதிரணி குற்றஞ்சாட்டியிருந்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,
கருணா கூறியுள்ள விடயங்கள் அனைவருக்கும் தெரிந்தவை. இதனை எதிரணி பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயல்கிறது என்றார்.
இதே வேளை பொதுஜன பெரமுன கட்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன் போட்டியிடவில்லை எனவும் அவர் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தால், தமது கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனவும் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் திலும் அமுணுகம குறிப்பிட்டுள்ளார்.
கருணா அம்மான் வேறு கட்சியிலே போட்டியிடுவதாகவும் அவர் பொதுஜன பெரமுனவில் களமிறங்கியுள்ளதாக விசமத்தனமான பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் பொது ஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.