தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் திருமதி சசிகலா ரவிராஜ் திட்டமிட்டவகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்றையதிம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே சண்முகராஜா அரவிந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சண்முகராஜா அரவிந்தன் மேலும் தெரிவிக்கையில்,
ரவிராஜ் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட காலத்தில் இருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் அரசியலில் ஈடுபடுவதை அவருடைய மனைவியார் மற்றும் அவருடைய குடும்பம் விரும்பவில்லை.
அவருடைய அரசியலுக்கு அவர்கள் எந்தவிதமான ஆதரவையும் கொடுத்ததாக நான் அறியவில்லை, நீங்களும் அதை அறிந்திருப்பீர்கள்.
உதாரணமாக சொன்னால் மாநகர முதல்வராக கடமையாற்றியுள்ளார், பாராளுமன்ற உறுப்பினராக இந்த பிரதேசத்திலே தெரிவு செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு நிகழ்விலாவது ரவிராஜ் உடன் அவரது மனைவி இணைந்து பயணித்த வரலாறு இருக்கின்றதா? இல்லை.
அவருடைய பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் அவர் இறந்த அடுத்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலே வந்து இறங்கி இருக்க வேண்டும். அல்லது அதற்கு பிறகு வந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலிலாவது களமிறக்க பட்டிருக்க வேண்டும்.
இன்றைக்கு தங்களுக்கு ஏற்பட்ட சரிவுகளை தவிர்ப்பதற்காக, தங்களுடைய பரப்புரைகளுக்கு அவருடைய பெயரை வைத்து தாங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக அதாவது திருமதி ரவிராஜ் அவர்களை கொண்டுவந்து களமிறக்கியுள்ளார்கள்.
அது அவர்களுடைய தனிப்பட்ட அரசியல் நலன், அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் திருமதி ரவிராஜை திட்டமிட்டவகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக நான் பார்க்கின்றேன்.
தன்னுடைய கணவர் விட்ட பணியை தொடர்ந்து செய்வது என்று சொன்னால், மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அரசியலில் பிரவேசித்தது போல் திருமதி சசிகலா ரஜிராஜூம் அரசியலில் வந்திருக்க வேண்டும்.
இவ்வளவு கால இடைவெளிக்கு பிறகு வருவதென்பது, இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட சரிவினை நிவர்த்தி செய்வதற்காக இவர்களுடைய அனுதாபங்களை, மக்களிடையே கொண்டுபோய் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் களமிறக்கியுள்ளார்களே தவிர அவர் தன்னுடைய கணவர் விட்ட பணியை செய்வதற்கு வந்ததாக நான் கருதவில்லை.