பொதுத் தேர்தல் 2020 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்திற்கு இதுவரை 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அரச வாகனத்தினை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக முதலாவது முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
இதேவேளை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் பிரதேச செயலாளரின் பொறுப்பிலுள்ள உடமைகள் அவரது அனுமதியின்றி அரசியல்வாதியினால் அகற்றப்பட்டதாகவும், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் நேர்முகத் தேர்வொன்று நடாத்தப்பட்டு ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த அபேட்சகர் ஒருவருக்கு வாக்களிக்கும்படி கோரப்பட்டதாகவும் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.
மேலும், அரச உத்தியோகத்தர் ஒருவர் பதவியிறக்கம் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலிருந்து மற்றுமொரு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதி மீறல் குற்றத்தின் அடிப்படையில் சாதாரன தரமுடையவை எனவும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலகம் மாவட்ட அரச ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளது.