தமிழகத்தில் இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர், யூசுப் (45). இவர் அசிலா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, காயிதே மில்லத் நகரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று பிற்பகலுக்கு மேல் வல்லம் மேம்பாலத்தில் யூசுப் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் அவரை திடீரென்று சரமாரியாக அரிவாளால் தாக்கியதால், வெட்டுப்பட்ட யூசுப், காரிலிருந்து இறங்கி தஞ்சாவூர் சாலையை நோக்கி ஓடியுள்ளார்.
அப்போதும் அந்த மர்ம நபர்கள் துரத்திச்சென்று ஓட ஓட விரட்டி வெட்டியதால், பலத்த காயமடைந்த யூசுப், சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த சில கிலோ மீற்றர் தொலைவிலே கலெக்டர் அலுவலகம், எஸ்.பி.அலுவலகம் என அனைத்தும் அமைந்துள்ள நிலையில், இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில், யூசப்பின் இயற்பெயர், ஜோசப். அவர், குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த போது, இலங்கை நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அசிலா என்பவரும் குவைத்தில் வேலைபார்த்து வந்துள்ளார்.
அங்கு, இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, பின்னர் காதலிக்கத் துவங்கியுள்ளனர்.
ஜோசப்பிற்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்த நிலையிலும் அசிலாவை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே ஜோசப், அசிலா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து தஞ்சாவூரில் இருவரும் வசித்து வந்துள்ளனர். திருமணம் நடந்து சில ஆண்டுகளிலே, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அசிலாவிற்கு தஞ்சாவூரில் சொத்துகள் இருப்பதால், சொத்துக்களைக் கேட்டு அசிலாவிடம் யூசுப் பிரச்னை செய்துள்ளார்.
இதன் காரணமாக இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் இரண்டு முறை அசிலா யூசுப் மீது புகார் செய்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையி, யூசுப் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
யூசப் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கரந்தைப் பகுதியிலிருந்த அசிலா தலைமறைவாகிவிட்டார். அவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
அசிலா கிடைத்த பிறகுதான் கொலைக்கான முழு காரணமும், யார் கொலை செய்தார்கள் என்ற விபரமும் தெரிய வரும் என்று பொலிசார் கூறியுள்ளனர். மேலும், யூசுப்பின் முதல் மனைவி பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை.