கொக்ககோலா நிறுவனத்தின் விளம்பரங்களில் இனவெறுப்பு உள்ளடக்கங்கள் உள்ளதா என்பதை ஆராய, 30 நாட்களிற்கு விளம்பரங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
உலகளவில் அதிக விளம்பரங்களை செய்யும் நிறுவனங்களில் கொக்ககோலா நிறுவனமும் ஒன்று. சமூக ஊடகங்களிலும் அதிகளவில் விளம்பரங்களைச் செய்து வருகிறது. இந்தநிலையில், தற்போது கொக்ககோலாநிறுவனம் தங்களது விளம்பரத்தைச் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் குறைந்தது 30 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
அன்டி டிஃபமேஷன் லீக், என்ஏஏசிபி உள்ளிட்ட அமைப்புகள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் #StopHateForProfit என்ற ஹாஷ்டேக்கைப் பயன்படுத்தி இனவெறி, வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் விளம்பரங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கொக்ககோலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கொக்ககோலா நிறுவனம் ஒருபடி மேலே சென்று ருவிட்டர், யூடியூப் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களையும் கருத்தில்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகக் கூறியுள்ளது.
கொக்ககோலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் குவின்சி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொக்ககோலா நிறுவனம் உலகளவில் அனைத்துச் சமூக ஊடகங்களிலும் ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தது 30 நாள்களுக்குக் கட்டண விளம்பரங்களை இடைநிறுத்தம் செய்கிறது. எங்களது விளம்பரங்களின் தரங்களையும் கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்ய இந்த நேரத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.
வெறுப்பு, வன்முறை மற்றும் தேவையில்லாத சில விஷயங்களை அகற்ற எங்களுடன் இணைந்து சமூக ஊடகங்களின் நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதிகளவிலான பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உலகில் இனவெறிக்கு இடமில்லை. அதேபோல, சமூக ஊடகங்களிலும் இனவெறிக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கொக்ககோலா இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே லிப்டன் டீ மற்றும் பென் அண்ட் ஜெர்ரி ஐஸ்கிரீம் உள்ளிட்ட பிராண்டுகளின் தலைமை நிறுவனமான யூனிலீவர் இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்காவில் முகநூல் மற்றும் ருவிட்டரில் தங்களது விளம்பரங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
முகநூல் தலைமை நிர்வாக அதிகாரி மார்க், கொள்கை மாற்றங்களைக் குறித்து அறிவித்தாலும், புறக்கணிப்புகளைப் பற்றிப் பதிலளிக்கவில்லை. வன்முறைகள், வெறுப்பு தொடர்பான பதிவுகளுக்கு எதிரான விமர்சனங்களையும் ஜனாதிபதி ட்ரம்பின் கணக்கு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கணக்குகளுக்கு எதிரான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முகநூல் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.