இது COVID-19 தொடர்பாக நாம் வெற்றிக்கனியை சுவைக்கும் நேரமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார்.
நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் நாட்டில் COVID-19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.
இது COVID-19 தொடர்பாக நாம் வெற்றிக்கனியை சுவைக்கும் நேரமல்ல. ஜெர்மனி, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். இந்நாடுகளில் தொற்றுக்குள்ளானோர் மீண்டும் பதிவாகும் நிலை உருவாகியுள்ளது.
தொற்றுக் காலத்தின் இடையில், அதேபோன்று இறுதியில் 46 வழிமுறைகளை நாம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தினோம். இந்த வழிமுறைகளில் மூன்று விடயங்களைப் பிரதான இலக்காக வைத்தோம்.
சமூக இடைவெளி, முகக்கவசம், கைகளை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாடு ஆகியனவே அந்த மூன்றுமாகும். அண்மைக்காலமாக மக்கள், சில நிறுவனங்கள், சில அதிகாரத் தரப்பினர் இந்த விடயங்கள் குறித்து ஆர்வமின்றி இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
நமது நாட்டில் வைரஸ் இல்லாவிட்டால் எதற்காக இதனை நடைமுறைப்படுத்துகிறீர்கள் என்று எவரேனும் ஒருவர் கேள்வி எழுப்பலாம்.
எம்மை விட பாரியளவில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படாத காரணத்தாலேயே அங்கு தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது
இத்தொற்று சமூகத்தில் பரவுவதைத் தடுப்பதற்குள்ள ஒரே ஆயுதம் தனிமைப்படுத்தல் சட்டம் என்பதால், அதனை முறையாகப் பின்பற்றினால் தான் முற்றிலும் தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
எவரேனும் வெளிநாடுகளில் இருந்து வந்தால், அவர்கள் விமான நிலையத்திற்கு வந்த உடனேயே தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்துவதே சிறந்தது.
எனினும், தனிமைப்படுத்தலுக்கு உட்பட விரும்பி சுற்றுலாப் பயணிகள் வரமாட்டார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆகவே, சுற்றுலாத்துறையை பாதுகாப்பதன் பொருட்டு வேறு விதமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஊடாக இந்த நாட்டில் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக நாம் பின்பற்றும் விடயங்கள் வெற்றியளித்தாலும் மக்களின் பங்களிப்பு இருந்தால் மாத்திரமே அதனைப் பூரணப்படுத்த முடியும்
என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.