அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்கள் கடன் நிவாரணங்களை வழங்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்காவிலுள்ள நிபுணத்துவ சங்கங்களுடைய அமைப்பின் 33 ஆவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
ஸ்ரீலங்காவை வழமையான பாதைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கு இரண்டு ஆண்டுகள் போதுமானது.
பொருளாதாரம் மேலும் பலவீனமடைவதை தடுத்து ஸ்திரத்தன்மையை பேணுவதுடன், முடிந்தளவு விரைவில் நாட்டை வழமையான நிலைக்கு கொண்டுவருவதே மிக முக்கியமானது.
கோவிட் 19 இன் தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் மிக முக்கியமான துறைகள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்த பின்னடைவின் பாதகமான தாக்கம் ஸ்ரீலங்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தீங்கை விளைவிக்கலாம்.
கொரோனா நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கையோடு பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலான மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் உடனடியாக வளர்ச்சியை விரைவுபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து போன்ற துறைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன குறைந்தது இரண்டு வருடங்களுக்கு கடன் மீள்கொடுப்பனவை பிற்போடுமாயின், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தேவையான சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்கக் கூடியதாக இருக்கும்.
அத்தகைய நிவாரணங்களை வழங்குவதன் ஊடாக அந்தந்த நாடுகள் பொருளாதாரத்தை தூண்ட முடியும் என்பதுடன், விரைவான மீட்சிக்கும் வழிவகுக்கும்.
தற்போதைய தருணத்தில் சர்வதேச சமூகம் இது குறித்து மிகவும் தீவிரமாக சிந்திக்கும்.
பொருளாதார கண்ணோட்டத்தில், முன்னால் உள்ள குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துவதுடன், நடைமுறைத் திட்டங்கள் அமுல்படுத்தும் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப்பின் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலும் சர்வதேச நிதி நிறுவனங்கள் கடன் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.