படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் துணை, நடிகர், நடிகைகள் கடும் பொருளாதார சிக்கலில் உள்ளனர்.
இந்நிலையில் சிலர் கொரோனா முடியும் வரை தங்கள் வாழ்வாதாரத்துக்காக தொழிலை மாற்றியுள்ளனர்.
தற்போது மராத்தி நடிகர் ரோஷன் சின்கே (Roshan Shinge) காய்கறி விற்றுவரும் செய்தி இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சில மராத்தி படங்களில் நடித்துள்ள இவர், புனேவில் காய்கறி மற்றும் பழங்கள் விற்று வருகிறார். ‘ரகு 350’ என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த மார்ச் 19 ஆம் தேதி புனே சென்றார்.
ஷூட்டிங் அடுத்த சில நாட்களுக்கு தள்ளிப் போக, திடீரென்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், அங்கேயே தங்கிவிட்டார்.
பிறகு கையில் பணம் செலவழிந்துவிட, ஏதாவது செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து காய்கறி மற்றும் பழங்கள் விற்க முடிவு செய்து புனேவில் விற்று வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘ லாக்டவுனால் பொருளாதார நிலை பாதித்துவிட்டது. பணத் தேவை, முடிந்ததை செய்யும்படி கட்டாயப்படுத்தியது.
என் நடிப்பு திறனையும் பயன்படுத்தி நகரில் காய்கறி விற்பனை செய்து வருகிறேன். சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதைக் கண்டேன்.
இதனால் இந்த வைரஸ் எளிதாகத் தாக்கலாம் என்று நினைத்ததால், வீடுவீடாக சென்று விற்பனை செய்ய முடிவு செய்தேன். அதன்படி செய்துவருகிறேன். வயிற்றுப் பசிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும், என் திறமையால் உலகில் புன்னகையை பரப்ப வேண்டும். இதற்காகவே இதை வியாபாரத்தை எடுத்துக்கொண்டேன். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை என்கிறார் ரோஷன் சின்கே.