பிள்ளையானை தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கே அவரது கட்சியின் செயலாளர் செயற்படுவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பிள்ளையானை குழிதோண்டி புதைக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அக்கட்சியில் உழைத்தவர்களை வேட்பாளராக நியமித்திருந்தால் அக்கட்சியில் பிள்ளையான் வெற்றிபெற்றிருப்பார் எனவும் முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்றது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் த.வரதராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை வேட்பாளர், கட்சியின் செயலாளரும் வேட்பாளருமான வி.கமலதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின்வேட்பாளர்கள் உரையாற்றியதுடன் இந்த கூட்டத்தில் பெருமளவான ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மட்டக்களப்புக்கு வரும்போது இங்குள்ள மக்கள் அவருக்கு ஈக்கு கட்டினால் அடிக்கவேண்டும் எனவும் இதன்போது முரளிதரன் தெரிவித்தார்.


















