மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வரட்டி நிலவுகின்ற நிலையில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
கடும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் நீர் வற்றிபோயுள்ளது.
இதன் காரணமாக வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் குடிநீர் விநியோகம் பௌசர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
கோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவான், காயங்கேணி, கட்டுமுறிவு, பணிச்சங்கேணி, மதுரங்குளம், பலாச்சேனை, மாங்கேணி மத்தி, பனிச்சங்கேணி, கிரிமிச்சை, புனாணை கிழக்கு, மாங்கேணி தெற்கு உட்பட கதிரவெளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்தி 308 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 553 பேர்களும்,
கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் பகுதியில் 236 குடும்பங்களைச் சேர்ந்த 831 பேர்களும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான், புணானை கிழக்கு பகுதிகளில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1264 பேர்களும், கோரளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை, பூலாக்காடு, குடும்பி மலை, வானநேரி, புனாணை மேற்கு உட்பட கிரான் மேற்கு பகுதிகளில் 1751 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்தி 810 பேர்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பன்சேனை, இலுப்படிச் சேனை, கொத்தியாபுல, குறிஞ்சாமுனை, நெடியமடு, பாவக்கொடிச் சேனை, உன்னிச்சை, காந்தி நகர், ஆயித்தியமலை, காஞ்சிரங்குடா, ஆயித்தியமலை வடக்கு உட்பட வவுனதீவு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்தி 694 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்தி 783 பேர்களும் கிடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
அத்துடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பாலயடிவட்டை, பட்டபுரம், விவேகானந்தபுரம், காந்திபுரம், திக்கோடை, தும்பங்கேணி, வீரச்சேணை, மாவட்குடா, நெல்லிக்காடு, புன்னகுளம், ரணமடு, சின்னவத்தை,
மாலயர்கட்டு, வம்மியடியூத்து, களுமுந்தன்வெளி, கண்ணபுரம், ஆனைகட்டியவெளி, விளாத்தோட்டம், வெல்லாவெளி, மண்டூர் தெற்கு, காக்காச்சிவட்டை, பலாச்சோலை, தும்பங்கேணி, சங்கர்புரம் ஆகிய பகுதிகளில் 6001 குடும்பத்தைச் சேர்ந்த 19 ஆயிரத்தி 971 பேர்களும் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
மேலும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மங்களகம, கரடியனாறு, பெரிய புல்லுமலை, உறுகாமம், கோப்பாவெளி, கொடுவாமடு, கித்துள், பன்குடாவெளி, வேப்பவட்டுவான், மரப்பாலம் உட்பட ஈரலக்குளம் பகுதிகளில் 2ஆயிரத்தி 240 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்தி 190 பேர்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி அதிகார சபைகள் உதவியுடன் 33 பவுசர்கள் மூலமாக நீர் விநியோம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை இந்த வரட்சிக் காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கலாமென வளிமண்டல திணைக்களத்தின் எதிர்வு அறிக்கைக்கமைய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.