வடக்கு-கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்றதைப் போன்றே அவர்களின் வார்த்தைகள், அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மாதுபான சாலைகள் வைத்திருப்பதாகவும் கருணா மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார்.
அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அவர் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.
அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.
போலி முகநூலில் பதிவிடுகின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு ஒரு பொறுப்பான நிலையில் இருக்கின்றதாக கூறிக்கொள்ளுகின்ற கருணா இப்படியான கருத்துக்களை சொல்லக்கூடாது.
ஆகவே மீண்டும் சொல்லுகிறேன் அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் என்னுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அவர் அதனை நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் என்னுடைய நாடாளுமன்ற போட்டியிலிருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
நானும் ஒரு போராளி. என்னுடைய எண்ணத்தை வலுவாக்கி அல்லது எனது இனத்தை நாசமான ஒரு சூழலில் கொண்டு சென்று வாக்குக் கேட்பது என்பது எனக்கு உகந்ததல்ல.
ஏனென்றால் நான் ஒரு விடுதலைக்காக சென்றவன். அந்த வகையில் எங்களுடைய மக்களை மிகவும் மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாட்டில் எனது மனசாட்சி ஒரு போதும் இடம் கொடுக்காது.
எனது உடலில் ஓடுகிறது தன்மான தமிழனின் இரத்தம். ஆகவே என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை. கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இருந்து ஒரு போதும் காட்டிக் கொடுக்கவில்லை.
முப்படைகளையும் கொண்ட எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களை சர்வதேசத்தோடும் இராணுவத்துடனும் சேர்ந்து கருணா எங்களுடைய இந்த பலத்தை அழித்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை நாங்கள் நிரூபிக்க முடியும்.
நாடாளுமன்ற ஹன்சாட்டில் பார்த்தால் மேதகு தலைவர் பிரபாகரனை அவன் , இவன் என்று பேசிய பதிவுகள் உள்ளது.
அதனை என்னால் நிரூபிக்க முடியும். தற்போது தேர்தலுக்காக வந்து தலைவர் என்று மரியாதையாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
ஏனென்றால் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் தற்போது அவ்வாறு பேசுகின்றார்.
ஒரு முறை நான் சொன்னேன் தலைவரை பற்றி அவன் இவன் என்று பேச வேண்டாம். தலைவர் உங்களில் சரியான மரியாதை வைத்திருக்கிறார்.
ஆகவே அந்த வகையில் அவன் இவன் என்று சொல்ல வேண்டாம் என்று நான் நாடாளுமன்றத்தில் வைத்து அவரை தனியாக அழைத்து சொன்னேன். அதற்கான உதாரணத்தையும் சொன்னேன்.
கருணா பிரச்சினைப்பட்டுப்போன போது, தமிழ்ச்செல்வன் கூறினார், இந்த படங்களை எடுக்க வேண்டும் என்று. இதன் போது தலைவர் கூறினார் ஆணையிறவு சமர் மற்றும் பல சமரில் கரணாவின் வரலாறு பதிந்திருக்கின்றது. ஆகவே அதை எடுக்க முடியாது என்ற செயற்பாட்டை அவர் சொன்னார்.
அப்படியான ஒரு மேதகு தலைவரை கருணா நாடாளுமன்றத்தில் அவன் இவன் என்று மஹிந்த ராஜபக்ஸவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக அவருடைய காலை வருடுவதற்காக இப்படியான கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அதனை ஹன்சாட் மூலம் என்னால் நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.