தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் ஆரம்ப ஆட்சேபனைகளை தெரிவிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கருணா அம்மானை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட கோரி கடுவெல நகரசபை உறுப்பினர் ஒருவரும் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியருமான பொசேன் காலஹே பத்திரன ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஹரிபிரிய ஜயசுந்தர, குறித்த மனு உரிய சட்ட காலத்திற்கு ஏற்றவாறு தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
ஆகையினால், அந்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதில் பலனில்லை எனவும், எனவே இதுகுறித்து எதிர்வரும் நாட்களில் அடிப்படை ஆட்சேபனைகளை தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், கருணா அம்மான் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த 19ம் திகதி திகாமடுல்ல தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன், “தான் கொரோனாவை விட பயங்கரமானவன் என்றும், ஆணையிரவில் ஒரே இரவில் 2,000 முதல் 3,000 இராணுவத்தினரை கொன்றேன்” என பகிரங்கமாக கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தின் மூலம் கருணா அம்மான் தண்டனை சட்டத்தின் 293 மற்றும் 294 ஆகிய பிரிவுகளுக்கமைய தவறானது எனவும் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பிற்கு இணங்கவும் தவறு எனவும் மனு தாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 17 (1) பிரிவின் சரத்துக்களுக்கு அமைய தவறு எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஓமல்பே சோபித தேரர் குற்றப் புலனாய்வுத் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அது குறித்து உரிய விசாரணைகள் இதுவரை நடைபெறவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் கருணா அம்மானை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளமை குறிப்பிடதக்கது.