2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதாக அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தால், கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எதுவும் உருவாகி இருக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மைத்திரி நீங்கள் அவசரப்பட வேண்டாம் நான் உங்களை பிரதமராக நியமிப்பேன் என மகிந்த ராஜபக்ச, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தெரிவித்திருந்தால், எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.
ஆனால் இறுதியில் என்ன நடந்தது? நாட்டை காப்பற்றிய தலைவர் தோல்வியடைந்தார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என தற்போது கூறுகின்றனர். ஆனால் மைத்திரிபால சிறிசேனவே மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.
அப்படி பார்த்தால் மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவை சார்ந்து இருந்துள்ளார் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.