அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இதுவரை, 2,935,770 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 132,318 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,260,405 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அமெரிக்காவில், கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் சுதந்திர தின விழாவினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடத்தி வருகிறார்.
இதில், கொரோனாவுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
வாஷிங்டனில் நடக்கும் இந்த சுதந்திர தின விழாவில், இராணுவ விமானங்களின் சாகசங்கள், வானவேடிக்கை மற்றும் ஜனாதிபதியின் உரை ஆகியவை இடம்பெறுகின்றன.
அத்தோடு, இவ்விழாவால், மிகத் தீவிரமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக , வாஷிங்டன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதை மீறி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க, வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ”சீனாவிலிருந்து வந்த பயங்கர தொற்று நோயிடம் இருந்து, மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்’ என, விழா நடப்பதற்கு முன் ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனாவினால் அமெரிக்கா எதிர் நோக்கியுள்ள பாதிப்பைக் கருத்தில் கொள்ளாமல், டிரம்ப் கருத்து தெரிவித்து வருவதும், விழா நடத்தி கூட்டம் சேர்ப்பதும் ஆபத்தத்தின் உச்சம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அதோடு கூட்டத்தில் பங்கேற்போர் யாரும் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்பதுடன் அவர்கள், முகக் கவசமும் அணியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இந்த விழா கொரோனாவால் ஏற்படும் பேரழிவுக்கு வித்திட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.