நாட்டில் ஜனாதிபதி ஒரு கட்சியிலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பிறிதொரு கட்சியாகவும் காணப்பட்டால் பாரதூரமான முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஜனாதிபதி, பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் மக்கள் பலத்தை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பொலன்னறுவையில் பிறந்ததால் என்னையும் வளைத்து விடலாம் என்று ரணில் விக்கிரமசிங்க எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று வருடங்கள் நிறைவடையவுள்ளன. மாகாணசபைத் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. எனது அரசாங்கத்திலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டு மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தினார். தொடர்ச்சியாக குழுக்களை நியமித்தார். எனினும் செயற்திறனற்ற குழுவாகவே அமைந்தது.
புதிய ஜனாதிபதியின் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காணவே நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றோம்.
தற்போது அரசியல்வாதிகளால் அரசியல் கலாசாரம் சீரழிந்துள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல் , மோசடிகளுக்கு உள்ளாகியிருப்பதால் பொது மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.
இவை அரசியல் நெருக்கடிகளின் ஒரு தொகுதியாகும். அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை நோக்கும் போது அவற்றை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும்.
தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற பலம் எதிர்க் கட்சிக்குச் சென்றால் என்ன ஆகும் ? அரசாங்கம் மாத்திரமல்ல முழு நாடும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.