கிரிக்கெட் உலகக் கிண்ண ஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை, சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்காக, சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது எவ்வித ஆட்ட நிர்ணய சதியும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்து, விளையாட்டு அமைச்சிலுள்ள விளையாட்டுத் தவறுகளைத் தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவு சமர்ப்பித்த குறித்த அறிக்கையை, விளையாட்டு அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இறுதி அறிக்கை தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக, அதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாக விளையாட்டு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மஹிந்தானந்த அலுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அவரிடமும், அதனைத் தொடர்ந்து குறித்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வாவிடம் சுமார் 6 மணி நேர வாக்குமூலமும் (ஜூன் 30), அப்போட்டியில் பங்குபற்றிய கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவிடம் 2 1/2 மணி நேர வாக்குமூலமும் (ஜூலை 01), அவ்வணிக்கு தலைமை தாங்கிய குமார் சங்கக்காரவிடம் நேற்று (02) சுமார் 9 1/2 மணி நேர வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதோடு, ஜூலை 03ஆம் திகதி மஹேல ஜயவர்தனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் அவரை அங்கு ஆஜராக வேண்டாம் என, விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.