ஹைதராபாத்தில் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் சிலிண்டரை ரூ. 1 லட்சம் வரை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அவசியமாகிறது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் நோயாளிகளுக்கு இதனை பயன்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்துள்ளது. அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி ஒரு சிலர் தவறான வழியில் பணம் ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் சில கும்பல் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சட்டவிரோதமாக வாங்கி அதிக விலைக்கு விற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் சில சிலிண்டர்கள் ரூ. 1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அவர் இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கான உரிய உரிமமும் கைது செய்யப்பட்டவரிடம் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் எச்சரித்துள்ளார். மேலும் சில கும்பல் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற செயல்களால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேவை உள்ளவர்களுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.