பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,43,599 ஆக அதிகரித்துள்ளது இதன் மூலம் வைரஸ் பாதிப்பில் இத்தாலியை பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளியுள்ளது.
தெற்காசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் வைரஸ் பாதிப்பு குறைவாக காணப்பட்டாலும், அந்நாட்டு அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக வைரஸ் பாதிப்பு அங்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி அந்நாட்டின் சுகாதாரத்துறை, மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் என பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாகிஸ்தான் அரசு அங்கு பாதிப்பு அதிகம் உள்ள சிந்து, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,43,599 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 11வது இடத்திற்கு பாகிஸ்தான் வந்துள்ளது. பாதிப்பில் ஐரோப்பிய நாடான இத்தாலியையும் பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகள் பட்டியலிலும் 18 இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை இங்கு 5,058 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் அதிகபட்சமாக சிந்து மாநிலத்தில் 1,00,000 பேரும் பஞ்சாப்பில் 85,261 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.