நேபாளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் போகாராவில் உள்ள சாரன்கோட் மற்றும் ஹெம்ஜன் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு கடுமையான நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே இன்று அதிகாலை அங்குள்ள சாரன்கோட் மற்றும் லாம்ஜங் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அப்பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தது. இதில் வீடுகளில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஜஜோர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 வீடுகள் மண்ணில் முற்றிலும் புதைந்துள்ளதாகவும் இதில் அப்பகுதியில் வசித்து வந்த 19க்கும் மேற்பட்ட நபர்களை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலச்சரிவுகளால் நாட்டின் மேற்குப் பகுதி சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுள்ளன. மேலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 48 மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால் நாராயணி உட்பட நேபாளத்தின் பிற முக்கிய நதிகளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அடுத்து மூன்று நாட்களுக்கு நேபாளத்தில் கனமழை நீட்டிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.