கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அடுத்த 15 முதல் 30 நாட்களில் இரு மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த இரண்டு மாதங்கள் அரசுக்கு பெரும் சவாலானதாக இருக்கும் என்று அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். ஆனாலும் மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறாமல் அனைவரும் அதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக பெங்களூருவில் திடீரென உயர்ந்த கொரோனா பரவல் மக்களை பெரும் அச்சத்தில் உறைய வைத்தது. பலரும் நகரை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இதனால் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் எழுந்தது. இதனால் மக்கள் யாரும் வெளியேற வேண்டாம் என அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து பெங்களூருவில் வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் ஜூலை 22 காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, கர்நாடகாவில் அடுத்த 15 முதல் 30 நாட்களில் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் என்று கூறினார். மேலும் அடுத்த இரண்டு மாதங்கள் கர்நாடக அரசிற்கு கொரோனாவை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ளவோ, நம்பிக்கையை இழக்கவோ தேவையில்லை என்றும் பெங்களூருவில் ஜூலை 14 முதல் 22 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் கர்நாடகாவில் சில முக்கிய மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அங்கு 36,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 613 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 14,716 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.