கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் வசதிகள் போதிய அளவில் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு 7,438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் போதுமான தனிமைப்படுத்தும் முகாம்கள் மற்றும் வசதிகள் இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தெரிவித்தது. ஆனால் மாநில அரசு பொய் கூறுவதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி போதிய அளவில் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தனியார் நிறுவனங்களுக்கு அரசியல் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ள அவர், கொரோனா தொடர்பான மருத்துவ தகவல்கள் முறையாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஊழல் நிறைந்த அரசாக இருப்பதாகவும், வன்முறையை மட்டுமே விரும்புவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ’நிதி முறைகேடு, பெண்கள் மீதான கொடுமைகள் உள்ளிட்ட பிரச்னைகள் கேரள அரசில் உள்ளது. இதுபோன்ற கட்சிகளை எதிர்த்து போராடி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் பாஜகவை கேரள மக்கள் பாராட்ட வேண்டும். நாங்கள் கேரளாவில் ஆட்சியில் இல்லையென்றாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவதே எங்கள் நோக்கமாக உள்ளது. கேரளாவின் 17 நகரங்கள் அம்ரித் தாரா திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. 8 ஆறுகளில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் கேரளாவில் வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது’ என்றும் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.