இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணியின் ஸ்கோர் 72 ஆக உயர்ந்தபோது பர்ன்ஸ் 42 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிப்லி அரைசதத்துடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த டென்லி 29 ரன்களும், கிராவ்லே 76 ரன்களும் எடுத்து தங்கள் பங்கிற்கு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்து அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். அதன்பின் வந்த பட்லர், போப், பெஸ் ஆகியோரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
4ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை விட 170 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தாலும், கடைசி நாள் ஆட்டம் முழுமையாக உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது