நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரான விமல் வீரவன்சவின் பிரச்சாரக் கூட்டத்துக்கு முத்தையா முரளிதரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முரளிதரன், வீரவன்சா மற்றும் தமிழ் தொழிலதிபர்களுக்கும் இடையில் கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே முரளிதரன் ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளதாக வீரவன்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஏராளமான தமிழ் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொழும்பு, புறக்கோட்டை வர்த்தகர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தொழிலதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, தமிழ் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.




















