சீனாவில் மையமாகக்கொண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 83 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் இயற்கையின் கோர தாண்டவம் ஆரம்பித்துள்ளது. சீனாவில் 27 மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் மூன்று கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். 20 லட்சத்திற்கு அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெய்த மிக அதிக மழையாகும். 33 நதிகளில் அபாய அளவைத் தாண்டி மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாங்க்குவிங், அன்ஹூய், ஜியாங்க்சி, ஹூபேய் மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் நிலைமை மோசமாகி உள்ளது.