அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற சில அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பதாக ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறையும் விசாரணை நடத்தியது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் மறுத்தனர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் திகதி நடக்க உள்ளது.
இதில், டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் போட்டியிடுகிறார்.
இவர் நிகழ்ச்சி ஒன்றில், 2016-ல் பார்த்த அதே சம்பவம் மீண்டும் அரங்கேறுகிறது. இம்முறை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பிற அந்நிய நாடுகள் நமது ஜனநாயகத்திலும், நமது தேர்தல் நடைமுறைகளிலும் தலையிடுவதற்காக ஆயத்தமாகி வருகின்றன.
இதுதொடர்பாக நம்பத்தகுந்த உளவு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
அவர்கள் தேர்தலில் தலையிட விடாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, எந்த நாடு தலையிட முயற்சிக்கிறது என்பதை வெளிஉலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.
ஆனால் இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது.
நான் அடுத்த அதிபரானால், நமது தேர்தல் நடைமுறையில் தலையிடும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.
எனது முழு அதிகாரத்தை பயன்படுத்தி பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிப்பேன். தலையிட்ட நாடுகள் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.