சென்னையில் வடிவேலு பட பாணியில், அரிசி கடையில் 75 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் காட்சி ஒன்றில், நடிகர் வடிவேலு, அரிசி கடைக்காரரின் கவனத்தை திசைத்திருப்பி, திருடிச்செல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும். திருட்டு தவறான பழக்கம் என்பதையும் தாண்டி, சினிமாவுக்காக அமைக்கப்பட்ட அந்த காட்சி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படத்தில் வரும் காட்சியை போன்று, சென்னை தரமணியில் அரிசிக்கடை உரிமையாளரை , இருவர் ஏமாற்றிச்சென்றுள்ளனர். கடையில் இருந்த அரிசி மூட்டைகளை ஒவ்வொன்றாக பிரித்து தரம் பார்த்த மர்மநபர்கள், 3 மூட்டை அரிசி வாங்க வந்துள்ளதாக கூறி நடித்துள்ளனர். தங்களிடம் போதிய பணம் இல்லை என்றும், தங்களுக்காக காத்திருக்குமாறு கூறிவிட்டு, ஆட்டோவில் ஏறி சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் காத்திருந்த பிறகே, கல்லாப்பெட்டியில் இருந்த 75 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் சந்திரன் கொடுத்த புகாரை அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.