பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் டிக்டாக் செயலியை அமெரிக்க அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதிப்பதற்கு அந்நாட்டு செனட் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எல்லை பிராந்தியமான லடாக்கில் சீனப்படைகள் ஊடுருவல் காரணமாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்தியா அதிரடியாக அறிவித்தது. மேலும் சீன பொழுதுபோக்கு செயலிகளை ராணுவ வீரர்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்திருந்தது. மேலும் இது குறித்து பேசியிருந்த அந்நாட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவின் டிக்டாக் செயலியை அமெரிக்காவிலும் தடை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே அமெரிக்க பயனாளிகளின் தரவுகளை சீனா திருட வாய்ப்புள்ளதால் இந்த டிக்டாக் செயலியை தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பிக்களும் வலியுறுத்து வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்காக சட்டம் இயற்ற அந்நாட்டு செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த டிக்டாக் தடை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற செனட் குழுவால் நேற்று ஒரு மனதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தடை சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க செனட் சபையில் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிக்டாக் மட்டுமின்றி சீனாவின் இன்னும் சில செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாகவும் அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் இது இந்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிக் டாக்கின் மாதாந்திர 26.5 மில்லியன் (2.65 கோடி) ஆக்டிவ் பயனாளர்களில் 60% பேர் 16 முதல் 24 வயதுக்குட்பட்டோர் என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.