வடகொரியாவில் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு பசியை போக்கும் மருந்து தயாரிக்கும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறையால் தத்தளித்துவரும் வடகொரியா, பட்டினியால் வாடும் மக்களுக்கு அளித்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத நடவடிக்கைகளால் ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளன. அமெரிக்காவுடன் இருமுறை முக்கிய சர்ச்சையில் ஈடுபட்டாலும், தடையை நீக்க அவர்கள் முன்வராத காரணத்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டிரம்ப்-கிம் ஜாங் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.தற்போது கொரோனா பரவலால் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் உணவு பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. பசியால் கடும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வடகொரிய நிர்வாகம், ஒருவகை ஆமையை உணவாக கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அங்குள்ள விஞ்ஞானிகள் குழு, பசியை போக்கும் மருந்து கண்டு பிடிக்கும் முனைப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் உத்தியோகப்பூர்வ ஊடகம் ஒன்று, அரிசி, சோளம், பழம், இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறைக்கு மத்தியில் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதில், பழைய காலத்திலிருந்தே, டெர்ராபின் எனப்படும் அந்த ஆமை வகை அதன் நல்ல சுவை மற்றும் ஏராளமான ஊட்டச்சத்து கூறுகளுக்காக உயர் ரக உணவுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது எனவும், இந்த உணவை மக்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஹெபடைடிஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களைக் குணப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.மட்டுமின்றி அரசாங்க மருத்துவர்கள் உருவாக்கியுள்ள தேநீரானது, பொதுமக்களுக்கு பசியை தூண்டாமல், 40 நாட்களில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.