தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவிற்கு வேலைக்கு செல்லலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றனர். ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள சில நிறுவனங்கள் தமிழக தொழிலாளர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்தந்த நிறுவனங்கள் வழங்கும் இ-பாஸ் ஒரு மாத காலத்திற்கு செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் இ- பாஸை புதுப்பிக்க வேண்டும் என்றும் பணிக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கான வாகனங்களை அந்தந்த நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.