வெளிநாடுகளிடமிருந்து பெறப்படும் கடன்களைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியானவை என்று நாம் கருதவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா உள்ளடங்கலாக எந்த நாடுகளிடம் கடன்களைப் பெற்றாலும் அவற்றுக்காக விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய நிபந்தனைகளையும் வட்டி வீதங்களையும் கருத்திற்கொண்டே நாம் ஆட்சியிலிருந்த போது கடன்களைப் பெற்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த நாடுகளிடமிருந்து கடன்களைப் பெற்றாலும், அவற்றைப் பெறுவதற்கான நிபந்தனைகள் மிகவும் முக்கியமானவையாகும். அந்த நிபந்தனைகள் நாட்டிற்கு நன்மையானவையா அல்லது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையா என்பது குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
அந்தவகையில் எமது அரசாங்கத்தில் பெரும்பாலும் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத கடன்களையே பெற்றிருக்கின்றோம். அதேபோன்று அந்தக் கடன்களைப் பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் செலுத்த வேண்டிய வட்டிவீதம் தொடர்பிலும் அவதானம் செலுத்துவோம்.
இந்நிலையில் கடன் பெறுவனவுகளைப் பொறுத்தமட்டில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியானவையாக எமக்குத் தோன்றவில்லை. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றிடம் கடனுதவிகள் அல்லது நிவாரண உதவிகளைப் பெறமுடியும். எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கு அத்தகைய கடன்களைப் பெறக்கூடிய வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.