ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் கோட்டா-மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கான அடித்தளத்தை இட்டவருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் களத்திலிருந்து பசில் ராஜபக்சவை இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சி கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் வகுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு இராஜகிரிய பகுதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் கடந்தகால வெற்றிகளுக்கு அடித்தளமிட்டவருமான பசில் ராஜபக்சவை அரசியல் களத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. பசில் ராஜபக்ச குறித்து முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளிநாட்டில் ஸ்ரீலங்கா தொடர்பில் செயற்பட்டவரும் விசேடமாக வெளிநாட்டு உறவுகளைப் பேணுகின்ற ஒருவரும் இன்னுமொருவரும் கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கக்கூடாது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் அடித்தளமானது பசில் ராஜபக்சவினால் இடப்பட்டுள்ளதால் அவரை எவ்வாறு அரசியலிலிருந்து நீக்குவது என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. பசில் ராஜபக்சவை அரசியலிலிருந்து இல்லாதொழிக்காவிட்டால் ஆட்சிக்கு வரவும் முடியாது என்றும் அவர்கள் உரையாடியுள்ளனர்.
இதுகுறித்த தகவல்கள் கிடைத்த நிலையில் பொலிஸ்மா அதிபரிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். பசில் ராஜபக்சவை நீக்காவிட்டால் எதிர்கட்சிக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போகும் என்றும் ராஜபக்ச குடும்பம் இன்னும் பல தசாப்தங்களுக்கு ஆட்சியமைக்கும் என்றும் உரையாடியுள்ளனர்.
எனவே இந்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக இரகசிய விசாரணை செய்யும்படியும் அதனால் பசில் ராஜபக்சவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். சில வேளை பசில் ராஜபக்சவுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
அவர் மிகவும் அரசியல் தந்திரவாதி என்பதால் அவரை அரசியலிலிருந்து தீர்த்துக்கட்டும் முறை பற்றி இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உயிர் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.



















