வியாட்நானாமில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தீடீரென அதிகரித்துள்ள வைரஸ் தொற்றால் நாட்டின் முதல் கொரோனா வைரஸ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவை துரிதமாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாகவும் வைரஸ் தொற்றால் உயிரிழப்புகளையே சந்திக்காத நாடாகவும் வியாட்நாம் இருந்து வந்தது. தெற்கிழக்கு ஆசிய நாடான வியாட்நாமில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு நடத்திய பரிசோதனை மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பு அங்கு விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனால் ஏப்ரல் மாதத்துக்குமேல் அங்கு சமூக பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இதனிடையே சமீபத்தில் டானங்கில் உள்ள பிரபல விடுதியில் புதிய பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 45 பேருக்கு வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படாத நாடு என்ற பட்டத்தையும் வியாட்நாம் துறந்துள்ளது.
இன்று டானாங்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் தனது முதல் உயிரிழப்பை அந்நாடு பதிவு செய்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாட்களுக்கு பிறகு மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது..



















