சட்டீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படையை (CRPF) சேர்ந்த வீரர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்துவரும் சிறுமி, கடந்த திங்கட்கிழமை மாடுகளை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அந்த காட்டில் மத்திய ரிசர்வ் படையினர் முகாமிட்டு தங்கியிருந்துள்ளனர்.
இதனிடையே மேய்ச்சலை கண்காணித்து வந்த சிறுமியை கண்ட சி.ஆர்.பி.எஃப் படை வீரர் ஒருவர் சிறுமியை அழைத்து துன்புறுத்தியதோடு பாலியல் வன்புணர்வும் செய்துள்ளார். இதன் பின்னர் அழுதுகொண்டே விட்டிற்கு வந்த அந்த சிறுமி நடந்தவற்றை தனது தாயிடன் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவளின் பெற்றோர்கள், டோர்னாபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்மந்தப்பட்ட வீரர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டவுடன் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளதோடு தீவிரமான விசாரணையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மக்களை பாதுகாக்க நிறுத்தப்பட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் படை வீரராலேயே சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.