ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மக்களுக்கு, தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முககவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சானிடைசர்கள் மூலம் கைகலை கழுவுவது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள், மதுபானம் கிடைக்காத விரக்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவிலும் மது கிடைக்காத விரக்தியில் சானிடைசர்களை குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிச்செடு கிராமத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்த மதுப்பிரியர்கள், மதுபானங்கள் கிடைக்காமல் திண்டாடி வந்துள்ளனர். இதனை அடுத்து கல்லச் சாராயம் காச்சுவது மட்டுமின்றி கடந்த 10 நாட்களாக கைகளை கழுவ உபயோகப்படுத்தப்படும் ஹேண்ட் சானிடைசர்களை தண்ணீர் மற்றும் குளிர்பானங்களில் கலந்து மதுப்பிரியர்கள் குடித்து வந்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், சானிடைசர்களை உட்கொண்ட இன்னும் சிலர் கிராமத்தில் உள்ள சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.